×

சிறுமுகை வனச்சரக நாற்றங்கால் பண்ணையில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் அரசு மரக்கிடங்கிற்கு எதிரே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு கொடுக்காப்புளி, தணுக்கம், நாவல்,காட்டு எலுமிச்சை,புளி,வேம்பு,சில்வர் ஓக்,தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து பின்னர் வனப்பகுதியிலும், தனியாருக்கு சொந்தமான நிலங்களிலும் நடப்பட்டு வருகின்றன.

வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வகையிலும், அதற்கு தேவையான உணவினை வனப்பகுதியிலேயே உருவாக்கும் நோக்கத்திலும்,வனப்பகுதியை வளப்படுத்தும் வகையிலும் வனப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதற்காக இந்த நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது கொடுக்காப்புளி, தணுக்கம்,நாவல்,காட்டு எலுமிச்சை,புளி,வேம்பு,சில்வர் ஓக், தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 40 ஆயிரம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து அதனை வனத்துறை ஊழியர்கள் காலை,மாலை என இருவேளைகளிலும் தண்ணீர் விட்டும்,தேவையான உரங்களை இட்டும் பராமரித்து வருகின்றனர்.

இவை வளர்வதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகும் எனவும்,சுமார் 2 அடி முதல் 3 அடி வரை வளர்ந்த பின்னர் அவை வனப்பகுதியிலும்,தனியார் நிலங்களிலும் நடப்படும் என தெரிய வருகிறது.இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் கூறுகையில் மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கிற்கு எதிரே உள்ள அரசு நாற்றங்கால் பண்ணையில் மொத்தமாக 40,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.சரியாக ஆறு மாதங்கள் உரிய வளர்ச்சிக்கு பின்னர் 33 ஆயிரம் நாற்றுக்கள் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் நட்டு வளர்க்கப்படும் எனவும், மீதமுள்ள 7 ஆயிரம் மரக்கன்றுகள் தனியாருக்கு சொந்தமான நிலங்களில்  வளர்ப்பதற்கும் வழங்கப்படும் என்றார்.



Tags : Mettupalayam: On the road from Mettupalayam to Kothagiri, opposite the Government Timber Depot, Sirumugai is under forest cover.
× RELATED விபத்தில் காவலர் பலி: முதல்வர் இரங்கல்